தூத்துக்குடி மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தனியார் நிறுவனத்திற்கு வணிக வளாகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை சந்தித்த பாஜகவினர், இன்று (அக்.12) புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ''தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்தபோது, இங்கு உள்ள பொதுமக்களின் போராட்டத்தின் விளைவாக இந்த இடம் காப்பாற்றப்பட்டு தாசில்தார் வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்த நபர் இந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சி எடுத்தாரோ, அவருக்கே தாசில்தார் அலுவலகத்திற்குள் வணிக வளாகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வட்டாட்சியரை அணுகி நாங்கள் விளக்கம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என அவர் பதில் அளிக்கிறார்.