தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி பாசனத்தில் விளையும் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. அதிக காரத்தன்மை கொண்ட இந்த வெற்றிலை, தமிழகம் மட்டுமின்றி இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஆத்தூர் வெற்றிலைக்கு தற்போதுதான் புவிசார் குறியீடும் கிடைத்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பின. அது மட்டுமல்லாது, அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் ஸ்ரீவைகுண்டம், ஆத்துர், ஏரல் ஆகிய பகுதிகள் முற்றிலும் சேதமடந்துள்ளன.
ஆத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சுற்றி 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. இங்கு வெற்றிலை கொடிகள் ஏக்கர் கணக்கில் உள்ளது. இந்த நிலையில், இந்த மழை நீர் காரணமாக வெற்றிலை கொடிகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.