தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (44). இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். ஆனந்தன் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை அடமானம் வைத்து கனரக லாரி ஒன்றை மாத தவணையின் பேரில் விலைக்கு வாங்கினார். ஆனால் சரியான முறையில் தொழில் இல்லாத காரணத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு லாரியை விற்க முடிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சுப்பிரமணியன் என்பவருக்கு ஆனந்தன் லாரியை விலைக்கு கொடுத்தார். அப்போது லாரியின் மொத்த விலையிலிருந்து ரூ.45 ஆயிரம், ஒரு மாத தவணைத் தொகையை மட்டும் ஆனந்தன் பெற்றார்.
மீதமுள்ள மாத தவனைத் தொகையை தானே செலுத்தி விடுவதாகவும், இரண்டு மாதத்தில் லாரியை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாகவும் சுப்பிரமணி உறுதியளித்தார்.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் சுப்பிரமணியன் லாரிக்கு மாதத் தவணை தொகையை செலுத்தாமல் மோசடி செய்தார். லாரி உரிமம் பெயரையும் மாற்றி எழுதவில்லை.