தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முடியாததால் ஆத்திரம்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌‌.

ஏடிஎம்மில் கொள்ளை
ஏடிஎம்மில் கொள்ளை

By

Published : Feb 20, 2023, 6:58 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை மெயின் ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இதன் அருகில் அதே வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது. அதேநேரம் இந்த ஏடிஎம் சென்டரில் பாஸ்புக் பதிவு செய்வதற்கான இயந்திரமும் உள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அவரால் அந்த இயந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர், அருகில் இருந்த பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரத்தை தனது காலால் உதைத்து, கீழே தள்ளி சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அதே ஏடிஎம் மையத்துக்கு ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார்.

அப்போது ஏடிஎம் மையத்தின் நிலையைக் கண்ட அவர், அங்கு இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த வங்கியின் மேலாளர் செல்வகுமார் (39) ஏடிஎம் மையத்துக்கு வந்து பார்த்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4வது தெருவைச் சேர்ந்த தேவராஜ் என்ற சாம் (22) என்பவர்தான் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தேவராஜை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்க முயன்ற இந்த ஏடிஎம் மையத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details