தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டினை நடத்திய காவலர்களே சாட்சியாளர்களா..? - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கி சூட்டினை நடத்திய காவல் துறையினர் வழக்கின் சாட்சியாக மாற்றப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்‌ குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

By

Published : May 19, 2022, 10:05 PM IST

மதுரையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், போராட்டக் குழு மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டாக செய்தியாளர்களைச்சந்தித்தனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த 3ஆம் கட்ட குற்றப்பத்திரிகையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ 3ஆவது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் ஒரு காவலரின் பெயர் கூட இடம் பெறவில்லை.

துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையை சி.பி.ஐ. வழக்கின் சாட்சியாக மாற்றியுள்ளது. இது தொடர்பாக 101 பேர் மீது 16 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். துப்பாக்கிச்சூட்டின் 4ஆம் ஆண்டு தினமான வருகிற 22ஆம் தேதி தூத்துக்குடியில் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்.

ஒரு நபர் கமிஷன் அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். சட்டப்பேரவையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். சிபிஐ அறிக்கையை நிராகரிக்கிறோம். காவல் துறை மீது விசாரணை இல்லாமல் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். சிபிஐ விசாரணையில் குற்றப்புலனாய்வு நடத்தப்படவில்லை‌. இதில் ஒன்றிய அரசு தலையீடு உள்ளது. சிபிஐயை அனீல் அகர்வால் பின்னிருந்து இயக்கி வருகிறார்.

தூத்துக்குடியில் இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையினை இயங்கவிட மாட்டோம். சிபிஐ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளோம்" எனக் கூறினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

சுட்டுத்தள்ளியவர்கள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள்:பின்னர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரஞ்சித்குமாரின் தாய் முத்துலட்சுமி கூறுகையில் "எங்கள் கண்ணீர் குரல் சிபிஐ காதுக்கு எட்டவில்லை. என் மகன் உயிரிழந்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகள் சிகிச்சையில் இருந்தேன். 10 மாதம் பெற்று வளர்த்த மகனை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்து இருக்கிறேன். அப்பாவி மக்களை காவல் துறை சுட்டுத்தள்ளி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் இன்று சுதந்திரமாக வலம் வருகிறார்கள்" என வேதனைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவர்களின் ஊதியப் பிரச்னைக்குப் புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை - மா.சுப்பிரமணியன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details