தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதை அடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடியைப் பொறுத்தவரை மழை முடிந்து மூன்று நாட்களாகியும், ஊரும் வீடுகளும் தண்ணீரில் தான் உள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் அகற்றப்படாததால், நிவாரண முகாம்களில் அதிகப்படியான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள மீட்புப் பணிகளில் தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, மூன்று நாட்கள் கழித்துத்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது? இந்த ஆட்சி எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சென்னையில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றதும், மூன்றாவது நாள் மக்கள் சாலைக்கு வந்துவிட்டனர். ஆனால், தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் பகுதி இதைவிட இன்னும் மோசமாக உள்ளது. நிவாரண பணிகளைத் தாமதப்படுத்தினால் மக்களுடைய கோபத்திற்கு நாம் அனைவரும் இரையாகி விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தூத்துக்குடியைப் பொறுத்தவரை மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான திட்டம் இல்லை.