தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத் துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.