'அங்கன்வாடி மையங்கள்' அறிவுப் பெட்டகத்தின் அடிப்படை. வளரும் இளம் சிறுவர், சிறுமியர்களுக்கு அடிப்படைக்கல்வி தரமானதாகவும் ஒழுக்கப்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அரசால் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றுதான் அங்கன்வாடி மையங்கள். நம் ஊர் பேச்சுவழக்கில் சொல்லப்போனால் பாலர் வாடி மையங்கள் அல்லது சத்துணவு மையங்கள் என அழைப்பதுண்டு.
பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்களைக்கூட தற்பொழுது கண்டுபிடித்து விடலாம். ஆனால், அங்கன்வாடி மையங்கள் இல்லாத ஊர்களை தற்போது தேடிப்பிடிக்க முடியாது. மலைக் கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் இவ்வளவு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு வருகிறார்கள் என செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்.
ஆனால், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில்கூட அரசால் பதிக்கப்பட்ட கல்விக்கூடம் உண்டெனில் அது அங்கன்வாடி மையங்களாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த அங்கன்வாடி மையங்களின் தற்போதைய நிலை என்ன?, அங்கன்வாடிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சரிவர நடத்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலை என்ன?, கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காமராஜர் காலத்திற்குப்பிறகு அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவுக்கூடங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் தரம் உயர்ந்துள்ளார்களா?, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?, மொத்தத்தில் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை தரமாக உள்ளதா? என்பது குறித்து தூத்துக்குடியில் ஈடிவி பாரத் தமிழ்நாடு கள ஆய்வு நடத்தியது.
இதற்கான ஆய்வு மேற்கொள்கையில் தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி பணியாளர்களின் செயலாளர் ராமமூர்த்தி சில கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'அங்கன்வாடி மையங்கள் பணியாளர், உதவியாளர் ஆகிய இரண்டு பேரைக் கொண்டு செயல்படுகிறது. இதில் அங்கன்வாடி பணியாளர் பணியில் உள்ளவருக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அங்கன்வாடி பணியாளருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காலமுறை ஊதியமாக 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு எட்டாயிரம் ரூபாய் ஊதியமும் வழங்கி வருகிறது. இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிப்பது தான் அங்கன்வாடி பணியாளர்களின் முக்கியப்பணி. இதில் அவர்கள் அக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை கற்றுத் தருவது, ஒழுக்கப் பண்புகளை கற்றுக்கொடுப்பது சிறுநீர், மலம் போன்ற இயற்கை உபாதைகளை கழிக்க சொல்லித்தருவது உள்ளிட்டப் பணிகளை நாள்தோறும் செய்துவருகின்றனர். இதுபோக தடுப்பூசி முகாம்களிலும், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள பகுதிகளிலும் கர்ப்ப காலங்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை சரியான முறையில் வழங்குவதும் இவர்களுடைய பணி.
இதுதவிர பேறுகாலம் ஆன தாய்மார்களுக்கு, அவருடைய குழந்தைகளின் வளர்ச்சி, எடை, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றையும் கண்காணித்து சுகாதார அலுவலருக்கு தகவல் அளிப்பதற்கும் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பணிக்காகவும் சத்துணவுப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இத்தகையப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பணிச்சூழல் என்பது மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. சில இடங்களில் அங்கன்வாடி கட்டடங்கள் புனரமைக்கப்படாமல் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. சில ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு அருகிலேயும், சில இடங்களில் சொந்த கட்டடங்கள் இல்லாததால் வாடகை கட்டடங்களிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.