தூத்துக்குடி: கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘105 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 100 ஆண்டுகளைக் கடந்து உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.25 கோடி தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.
நான் பார்த்த பள்ளிகளிலே மிகப்பெரிய அளவு வளாகம் கொண்டது, கோவில்பட்டி பள்ளிதான். இங்கு ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் தயான் சந்த் வந்து, தங்கி இருந்து பயிற்சி அளித்து உள்ளார் என்பது பெருமை வாய்ந்த விஷயம். அடுத்த ஆண்டில் 100 ஆண்டுகளைக் கடந்த பள்ளிகள் பட்டியலில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியில் மழைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது என்று கூறியுள்ளனர். அதனையும் இங்குள்ள திறந்தவெளி கலையரங்கத்தையும் அடுத்த ஆண்டு சீர் செய்யப்படும். எத்தனை ஆசிரியர் சங்கங்கள் இருந்தாலும், அத்தனைக்கும் தலைவர் நான்தான். எங்களுடைய ஆசிரியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களை எப்படி பக்குவப்படுத்தி வேலை வாங்குவது என்றும் தெரியும்.
NCERT பாடத் திட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று போட்டு உள்ளார்கள். அது குறித்த தகவல் எதுவும், எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்திற்கு SCERT மாநில கல்விக் கொள்கை என்று நமக்கு உருவாக்கி உள்ளோம். நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு என்ன தேவையோ, நாமே முடிவு செய்து கொள்வோம் என்பதற்காகத்தான் கமிட்டி அமைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் வந்து கொண்டு இருக்கிறது. இறுதி அறிக்கை வந்த பிறகு, முதலமைச்சரிடம் தெரிவிப்போம்.
எங்கள் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். எங்களுடைய பள்ளி மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை திட்டமாக தீட்ட முடியும். நாங்களே எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தால், எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்வதுபோல் ஆகும்.