தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 7:11 AM IST

ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவின்படி சாத்தான்குளம் தந்தை-மகன் உடல்கள் உடற்கூறாய்வு!

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த தந்தை-மகன் உடல்கள் நீதிமன்ற உத்தரவின்படி மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

anatomy-of-father-son-bodies-of-sathankulam
anatomy-of-father-son-bodies-of-sathankulam

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (56). அவருடைய மகன் ஃபென்னிக்ஸ் (31). அவர்கள் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்திவந்தனர். ஜூன் 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்திருந்தாகக் கூறி சாத்தான்குளம் காவல் துறையினர் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் 22ஆம் தேதி உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தானாக முன்வந்து நேற்று (ஜூன் 24) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதில் நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து நிலவர அறிக்கை தாக்கல்செய்யவும், இருவரின் உடற்கூறாய்வை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

மேலும் உடற்கூறாய்வை முழுமையாக காணொலியாகப் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முழுமையாகக் கண்காணிக்கும் எனத் தெரிவித்து, விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன்‌ ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் உடல்கள் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தந்தை, மகன் உயிரிழப்பு - செல்போன் கடை உரிமையாளர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details