தூத்துக்குடி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 18) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அந்த வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தொழில் முனைவோர்கள், சிறந்த கல்வியாளர், சிறந்த சைவ சித்தாந்தவாதி, சிறந்த விவசாயி, சிறந்த ஏற்றுமதியாளர் என்று எட்டு பேருக்கு வ.உ.சி விருதுகளை வழங்கினார். இதற்கு பின்னர் பேசிய அவர், “தேசம் சுபிட்சம் அடையாமல் நாம் சுபிட்சம் அடைய முடியாது. அதற்காகப் பாடுபட்ட நம்முடைய தேசத் தலைவர்களை நாம் கண்டிப்பாக நினைவுகூற வேண்டும். இது நம்முடைய கடமையாகும்.
தேசத்தலைவர்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவைகளை தலைமுறை தலைமுறையாக நாம் கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறை நம்முடைய தேசத்தலைவர்கள் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை தேசத்திற்கு ஆற்றிய கடமைகளை நினைவு கொள்ள வேண்டும். இந்த தேசம் எழுச்சி பெற்று வருகிறது. நாடு தன்னுடைய சுய பலத்தை உணர்ந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா தன்னுடைய தேவைகள் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை வளர்ச்சி நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.