தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி-சென்னை விமானத்தில் குஜராத் பயணியால் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி- சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் குஜராத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் எவ்வித அனுமதிச்சீட்டும் இல்லாமல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி- சென்னை விமானத்தில் குஜராத் பயணியால் பரபரப்பு
தூத்துக்குடி- சென்னை விமானத்தில் குஜராத் பயணியால் பரபரப்பு

By

Published : May 27, 2020, 10:31 AM IST

மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளுக்குள்பட்டு சென்னை- தூத்துக்குடி இடையே விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன்படி நேற்று (மே 26) மதியம் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் 42 பயணிகள் தங்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சொந்த ஊர் திரும்ப அனுமதிச்சீட்டு இல்லாமல் விமானத்தில் வந்த பயணிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.

மேலும் ஒவ்வொரு பயணியும் எங்கிருந்து வருகின்றனர் என்பதை அறிய அவர்களின் முழு விவரத்தையும் அரசு விதிமுறைகளின்படி, விண்ணப்பத்தில் பூர்த்திசெய்து பெற்றுக்கொண்டனர்.

அதில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி திரும்பியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் கருவி மூலம் சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.

இதில் அவருக்கு காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் அவரை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்க சுகாதாரத் துறை அலுவலர்கள் முடிவுசெய்தனர்.

பின்னர் அவரை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட போக்குவரத்துத் துறையிடமிருந்து பெறப்பட்ட தனிப்பேருந்தில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாமிற்கு கொண்டுசேர்த்தனர்.

அங்கு அவருக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தூத்துக்குடி-சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்கிய முதல்நாளில் வடமாநிலத்திலிருந்து பயணி ஒருவர் எவ்வித அனுமதிச்சீட்டும் இல்லாமல் ஊர் திரும்பியிருப்பது அவருடன் பயணித்த பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:கதவை உடைத்து வெளியேறிய தனிமைப்படுத்தப்பட்ட நபர்

ABOUT THE AUTHOR

...view details