தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சீல் வைத்தது. இவ்வாறு நான்கு ஆண்டுகளாக மூடி இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைமையிலான உயர் மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த உயர் மட்ட குழுவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயலர் கண்ணன் தலைமையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துணை இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட குழுவினர் மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் இன்று (ஜூலை 18) காலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள சிப்சமை வெளியேற்றுவதற்காகவும், இயந்திரங்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
4 வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயர் மட்ட குழுவினர் ஆய்வு! இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாசுகட்டுப்பாடு வாரிய செயலர் கண்ணன், “ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தில் சமர்பிப்போம். மேலும் ஆலையில் உள்ள கெமிக்கல், இயந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அதில் ஆலை 4 வருடம் இயங்காததால், பல இடங்களில் பழுதாகி மோசமான சூழ்நிலையில் உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு - நடவடிக்கை கோரி புகார்