தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்திற்கு முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முறை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர்கள், பிரமுகர்கள் என்னை சந்தித்து அனுமதி கேட்டனர். அதன்பேரில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று பிகில் திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்னரே உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்துவிட்டார். அதன்படி நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறுவோம்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.