தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் தமிழிசையின் ரசிகன். அவரின் கம்பீரம், அடக்கம், நாகரிகம், அவரின் பேச்சில் இருக்கும் தன்மை, உண்மை எனக்கு பிடிக்கும். அதிமுக கூட்டணியில் நான் சேரக்கூடாது என்று ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தும் வேலையை செய்தது. அந்த கோழைகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சிங்கத்தை உரசி பார்க்க வேண்டாம், அடங்காமால் பேசினால் என்னை அடக்க முடியாது. இப்படிப்பட்ட கோழைகள் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உண்மையின் அருமை எப்படித் தெரியும், கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நல்லது கெட்டது எப்படி தெரியும். அவர்களுக்கு தெரிவதெல்லாம் கல்லும் பணமும் மட்டும்தான்.
நடிகர் கார்த்திக் பரப்புரை மக்களுக்கு நல்லது செய்ய, நாடு வளம் பெற கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டும் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற அந்த சிந்தனை எதிரணிக்கு கிடையாது. நீங்கள் நல்லவர்களுக்கு, வல்லவர்களுக்கு, தேசப்பற்று உள்ளவர்களுக்கு, தமிழ்நாட்டினை, நமது மக்களை நேசிப்பவர்களுக்கு தாமரைக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் கார்த்திக் பேசும்போது நீங்கள் பாட்டு பாடினால் தான் ஓட்டுப்போடுவோம் என அங்கிருந்த மக்கள் கூறியதால்.. நடிகர் கார்த்திக் அமரன் படத்தில் இருந்து, 'வெத்தலபோட்ட சோக்குல...' என்ற பாட்டைப் பாடினார்.
தொடர்ந்து வடக்கு திட்டங்குளம், இலுப்பையூரணி மற்றும் எட்டயபுரம், இளம்புவனம் பகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்.ராஜு உடனிருந்தார்.