தூத்துக்குடிஎட்டையாபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர், வேலுப்பிள்ளை. இவரது மகன் மணித்துரை (28). இவர், 2015ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில் மணித்துரை கடந்த 1ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் இருந்த போது திடீரென துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மணித்துரைக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான், உதய சுருதி என்பருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மணித்துரை பணியில் இருக்கும்போது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணுவ அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இது குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவு பணத்தை இழந்த காரணத்தினால் மனம் உடைந்து மணித்துரை தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
மணித்துரை தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, கீழக்கரந்தையில் இருக்கக்கூடிய தனது தாய் கனகவேலம்மாளுக்கு செல்போனில் அழைத்துப் பேசி உள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணம் இழந்தது குறித்தும், ஆன்லைனில் விளையாட பலரிடம் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை என்றும்; இனி தான் வாழ விரும்பவில்லை என பேசிக்கொண்டு இருக்கும்போதே துப்பாக்கி சத்தம் இரண்டு முறை கேட்டதற்குப் பிறகு, மணித்துரை பேசவில்லை என்றதும் அவர் தாய் அதிர்ச்சியில் உறைந்து கத்தி கதறி அழுதுள்ளார்.