தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் TN 64 F 1584 என்ற பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்ட் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற உப்பள தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க சென்ற போது அங்கு காரின் டிக்கியில் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர். இந்த பரிசோதனையில் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த சடலமானது ஒரு ஆணின் சடலம் என்பதை கண்டறியப்படது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் சம்பவ இடத்திற்கு நேரில் வருகைதந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரிய வந்துள்ளது.