தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சமுதாயத்தின் சார்பில் டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த டிஜிட்டல் போர்டை நேற்று (ஜூலை 10) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதனை அடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிஜிட்டல் பேனர் போர்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: Karur IT Raid: கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!
இதனை அடுத்து பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். மேலும் மர்ம நபர்கள் பேனர் போர்டில் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சியில் 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சமுதாயம் சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிச்செல்கின்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.