தூத்துக்குடியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் கணேசன். தனது இளைமை பருவத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் பின் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு சென்னையிலுள்ள அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின் சொந்த ஊர் திரும்பிய அவர் அங்குள்ள உரத் தொழிற்சாலையில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றார்.
தொழிற்சாலையில் வேலை பார்க்கும்போது சக தொழிலாளர்கள் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்திற்காக வேற்றுமை பாராட்டியது அவரின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்திருந்தது. எனவே விருப்ப ஓய்வுக்குப் பின்னர் ஆங்கிலம் கற்க முடிவு செய்தார். தனது 58வது வயதில் ஆங்கில பயிற்சியை மேற்கொண்ட அவர் வெறும் நான்கே மாதங்களில் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் செய்யும் அளவுக்குத் தன்னிறைவு பெற்றார்.
மேலும் படிக்க விரும்பிய அவர், 2007ஆம் ஆண்டு தனது 60ஆம் வயதில் கம்யூட்டரில் டி.டி.பி. பயிற்சி முடித்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற கனவுடனிருந்த கணேசன் அடுத்தகட்டமாகச் சட்டம் படிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, அதைத்தொடர்ந்து கல்லூரி என வரிசையாகப் படித்திருக்கவேண்டும் என்பதால் அவரால் வழக்கறிஞராக முடியாமல் போனது.