தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனாவிற்கு மருத்துவத்தை விட தனிமைப்படுத்துதல் தான் சிறந்தது என்று கூறி நாடளுமன்றமும், சட்டப்பேரவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சுய ஊரடங்கினை மக்கள் முறையாக கடைப்பிடித்தனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் நம்மை காக்கும் கடவுள்களாக பணியாற்றி வருகின்றனர்.
அடித்தட்டு மக்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் குறைவாகத்தான் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.