தூத்துக்குடி மழை பாதிப்பு..ஒரே பகுதியில் 6 பேர் உயிரிழப்பு! தூத்துக்குடி:குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த கனமழையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம் என பல வகைகளிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில், முத்தையாபுரத்தில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி சிறுமி உட்பட 4 பேர் மற்றும் சுவர் இடிந்து 2 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி, முள்ளக்காடு, ஜே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. கனமழை காரணமாக இவரது குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், அத்திமரப்பட்டியில் வசிக்கும் ராணியின் சகோதரர் ஞானமுத்து என்பவர் ராணியின் வீட்டுற்கு வந்து, வீட்டிலிருந்த தாயார் ஞானம்மாள்(வயது 72), சகோதரி ராணி மற்றும் சிறுமி உட்பட அவர்களது உறவினர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடிய நிலையில் ராணி மற்றும் உறவினர்கள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, 19ஆம் தேதி, வெள்ளநீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞானமுத்து, அவரது தாயார் மற்றும் சிறுமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் முருகன் (வயது47) என்பவரது உடல் கடந்த 20 ஆம் தேதி பொட்டல்காடு முள் காட்டு பகுதியில் மழை வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையின் காரணமாக முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி மீனாட்சி (வயது 39) என்பவர் உயிரிழந்துள்ளார். இதேபோல், தங்கமணி நகர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிலில் படுத்திருந்த கந்தசாமி (வயது69) என்பவர் உயிரிழந்துள்ளார். கனமழையில் மட்டும் ஒரே பகுதியில் சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அப்பகுதியில் கடந்த 5 நாட்களாக தகவல் தொடர்பு மற்றும் மழை வெள்ளம் வடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!