தூத்துக்குடியில் மருத்துவப் படிப்பில் தேசிய நிறைவுநிலைத் தேர்வுக்கு (நெக்ஸ்ட்) எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
5ஆவது நாளாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்! - வாயில் கருப்புத் துணி
தூத்துக்குடி: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று வாயில் கறுப்புத் துணி கட்டியும், சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல் மருத்துவமனை வளாகம் வரை சுமார் 5 கி.மீ. தூரம் பேரணி நடைபெற்றது.
பேரணியில் மாணவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பலகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கமிட்டுச் சென்றனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், "இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது, தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இன்று பேரணியில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" என்றார்.