தூத்துக்குடி: பண்ருட்டியை அடுத்துள்ள நடுக்குப்பன் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (53). இவர் முந்திரிப் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் புல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரபிக் (42) என்பவர், தான் கடலூர் மாவட்டத்தில் முந்திரிப் பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறி அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து தேவராஜிடம், ரபிக் என்பவர் தன்னிடம் ரூ.42 லட்சம் மதிப்புள்ள 50 டன் முந்திரிப் பருப்பு இருப்பதாகவும், பணத்தை அனுப்பி வைத்தால் உடனடியாக முந்திரிப் பருப்பை அனுப்பி வைப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை நம்பி தேவராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 5 தேதி, அட்வான்ஸ் தொகையாக ரூ.50 ஆயிரம் ரூபாயும், அதற்கு அடுத்த நாளில் ரூ.42 லட்சம் பணத்தை ரபிக் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரபிக் முந்திரியை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார்.
இதனால் மனமுடைந்த தேவராஜ் தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தருமாறு ரபிக்கிடம் கேட்டதில் அவர் 2 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து தேவராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு, முகமது ரபிக் என்பவரை இன்று (ஜன.08)கைது செய்தனர்.பின் அவரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IVல் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெரம்பலூரில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..