தூத்துக்குடி:முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததற்காக மணல் கொள்ளை கும்பலால், சில நாட்களுக்கு முன்பாக அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த முறப்பநாட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுதான், அகரம் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் விவசாயி பாலகிருஷ்ணன் என்பவர், விவசாயத்துடன் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் பாலகிருஷ்ணன் உள்ளார். இதனையடுத்து அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரைப் பகுதியில் மணல் கொள்ளை நடக்கிறது என்றும், அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண்ணைத்தோண்டி எலும்புக் கூடுகள் வெளியே சிதறிக்கிடக்கிறது என்றும் கொடுக்கப்பட்ட தனது வார்டு மக்களின் புகாரை பெற்ற பாலகிருஷ்ணன், இது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் மணல் கொள்ளையர்களிடம் இருந்து பஞ்சாயத்து உறுப்பினர் பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 14.10.2020 அன்று, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தகட்ட விசாரணைகளில், மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும், 19.11.2020அன்று முதல் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பினை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என காவல் துறைக்கு பரிந்துரை செய்தனர்.