தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தில் கல்வாரி சேப்பல் டிரஸ்ட் எனும் அறக்கட்டளை எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளைப் பாதுகாத்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த அறக்கட்டளை மூலமாக படித்து நல்ல வேலையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து 10 திருமண ஜோடிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டு பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்து வரும் நிலையில் இங்கு தொற்றினால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவர்களைப் போல எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை கூறினார். மேலும் திருமண ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மாலை எடுத்துக்கொடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவில் தென்மாவட்டங்களில் உள்ள எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் நலம் விரும்பிகளுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
பின்னர் டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்ட சமூக நலக்கூடத்தையும், தங்கும் விடுதியையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.