திருவாரூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் விசிக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், இன்று (ஜன.4) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பை தீவிரப் பேரிடராக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ரத்து செய்து, வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் 146 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்த மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் பொழுது, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, விடுதலை சிறுத்தை கட்சியினர் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து, போக்குவரத்தை வேறு பாதையில் மாற்ற கோரியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, போராட்டம் நடக்கும் பகுதியில் தடுப்புகளை வைத்து வாகனங்களை வேறு பாதையில் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர், விடுதலை சிறுத்தை கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மைய மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் ஓவியா, தெற்கு மாவட்டச் செயலாளர் வெற்றி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை கத்திப்பாரா போன்று திருச்சியிலும் சாலை அமைக்கப்படும் - மேயர் அன்பழகன் தகவல்!