திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், குமரேசன் மற்றும் செந்தில் என்று அழைக்கப்படும் பல்லு செந்தில் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் திருவாரூர் மற்றும் பிற காவல் நிலையங்களில் உள்ளன. குறிப்பாக, செந்தில் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மணிகண்டன் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் திருவாரூர் கமலாலய குளம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
முக்கிய சாலை என்பதால் கூட்டம் கூடவே ஆட்டோவில் வந்த நபர்கள் அதே ஆட்டோவில் தப்பித்து ஓடினர். ஆட்டோவில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வண்டாம்பாளையம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த செந்தில் என்கிற பல்லு செந்திலையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர் . இதில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மணிகண்டன் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஆட்டோவில் வந்த நான்கு பேரை மறித்து விசாரித்தபோது, அவர்கள் சென்னையைச் சேர்ந்த மதுசூதனன், ராஜு, முருகன், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த நன்னிலம் காவல்துறையினர், தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை செய்தபோது, இந்த சம்பவத்தில் மேலும் பலர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மதுசூதனன் மூர்த்தி, நாகை பகுதியைச் சேர்ந்த ராஜு புறா செந்தில், திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், ஜெகதீசன், செந்தில்நாதன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.