திருவாரூரில் சம்பா அறுவடை பணிகள் முடிந்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வாணிபக் கழகம் சார்பில் 463 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது முறைகேடுகளில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் தலைமை அலுவலக பொது மேலாளர் தலைமையிலான பணிக்குழு மூலமாக சிறப்பு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் நெல் மூட்டைகளின் எடைகளில் தர வேறுபாடு மற்றும் தையல் குறைபாடு போன்ற காரணங்களின் அடிப்படையில் நேரடி கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தாளர்கள் 12 பேர் மற்றும் உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.