திருவாரூர்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று (ஜூலை 18) கண்டனம் தெரிவித்தனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இது குறித்து பேசிய விவசாயிகள், "தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்டகாலமாகவே தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சினை நீடித்துக்கொண்டே வரும் நிலையில் புதிய பிரச்சினையாக மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் பாதிக்கப்படும். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய நீராற்றல் துறை அமைச்சரிடம் முறையிட்டு மனு கொடுத்திருக்கிறார்.
விவசாய சங்கத்தினர் கோரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர், சர்வ கட்சிகளும் சேர்ந்து தொடர்ந்து ஒன்றிய அரசிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து டெல்டா விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் நடத்தும். இந்நிலையை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தீர்ப்பை மீறி அணை கட்ட தீவிரமாக இருந்துவருகிறது.
டெல்டா பகுதி விவசாயிகளின் நிலை அறிந்து அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதற்கு குடியரசுத் தலைவரும், ஒன்றிய அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.