திருவாரூர்: அம்மையப்பன் கடாரம்கொண்டான் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் மன்னார்குடி அருகே உள்ள கானூர் ராயபுரம் தென்கரை, வடகரை, நன்னிலம் நெடுங்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பொங்கல் விழா நெருங்கிவரும் நேரத்தில்தான் வருமானம் கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து மண்பானை செய்யும் பணிகளில் மும்முரமாகத் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
மண்பாண்டங்களை மறந்த மக்கள்
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறையில் செய்யப்பட்ட மண்பாண்டங்களை மறந்து செயற்கை முறையிலான பித்தளை சில்வர் அலுமினியம் பானைகளைப் பயன்படுத்துவதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கல் விழா நேரத்திலும் சரியான வருமானமின்றி வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய அவர்கள், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் வசித்துவரும் நிலையில் நாங்களும் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டத் தொழிலைத்தான் செய்துவருகின்றோம். அரசு ஒன்றரை அடி மண் எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
எங்களுக்கு ஐந்தடி ஆறு அடியில்தான் பானை செய்வதற்கு ஏற்ற மண் இருக்கும் ஒன்றரை அடியில் உள்ள மண்ணை எடுத்து ஆயிரக்கணக்கில் செலவுசெய்து தற்போது பொங்கல் விழா நெருங்கிவரும் நேரத்தில் மண்பாண்டங்களைச் செய்துவருகின்றோம். எங்களுக்குப் பொங்கல் விழா நேரத்தில்தான் வருமானம் கிடைக்கும் என்பதால் மும்முரமாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றோம்.