திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி வாசலில் கோலமிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக கிராமம் துளசேந்திரபுரம் ஆகும்.
தற்போது நடைபெற்ற அமெரிக்கத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேல் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் பதவிக்கும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸும் போட்டியிட்டுள்ளனர். அமெரிக்கத் தேர்தல் முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணி நேற்று(நவ.4) தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது.
கமலா ஹாரிஸுக்கு ரங்கோலி கோலத்தில் வாழ்த்து இந்நிலையில் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று துணை அதிபராக வர வேண்டும் என அவரது பூர்வீக கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த சில தினங்களாக கமலா ஹாரிஸ் குலதெய்வக் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அன்னதானம் எனப் பல்வேறு வழிபாடுகளை செய்து கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று(நவ.5) துளசேந்திரபுரம் கிராம மக்கள் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வாயிலாக அமெரிக்காவின் தேர்தல் நிலவரங்களை பார்த்தவாறும், அதில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் ஜனநாயக கட்சி முன்னிலையில் இருப்பதால் கமல ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் தங்கள் வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, கமலா ஹாரிஸுக்கு "WE WISH KAMALA HARRIS" என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு!