திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சியில் 2009ஆம் ஆண்டுமுதல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பார்ப்பதற்காக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு சிகிச்சைப் பெற்றுச்செல்கின்றனர். ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 நோயாளிகள் வரை, மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர்.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள், முகக்கவசங்கள், பஞ்சு உள்ளிட்டவைகளும் பிணவறையில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும்போது பயன்படுத்தப்படும் கழிவுகளும் மருத்துவமனையின் பின்புறத்திலேயே வீசப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளும் அப்பகுதியில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். இதனால் நோய்த்தொற்று பரவும் இடர் ஏற்பட்டுள்ளது என்கின்றனர், சமூக செயற்பாட்டாளர்கள்.