திருவாரூர்மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் 3 லட்சத்து 75ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பருவப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் முழுவதும் அறுவடைக்குத் தயாராகி நிற்கின்றன.
இந்நிலையில் அறுவடை பணிகளைத் தொடங்குவதற்காக வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள நெல் அறுவடை இயந்திரங்களை வைத்து அறுவடை செய்ய விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு.. வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்... இதற்குக் காரணம் திருவாரூர் மாவட்ட வேளாண்துறை மூலம் வழங்கப்படும் இயந்திரங்கள் மாவட்டம் முழுவதற்கும் 7 இயந்திரங்கள் மட்டுமே இருப்பு உள்ளது.
அதிலும் பல இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளதால் பதிவு செய்துள்ள பெரும்விவசாயிகள் மட்டுமே நல்ல இயந்திரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் கிடைக்காததால் தனியார் இயந்திரங்களைப் பெற்று, அதனையும் மணிக்கு ரூ.2500 முதல் ரூ.3200 வரை செலுத்தி அறுவடை செய்வது, விவசாயிகளுக்குக் கட்டுப்படி ஆகவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்குத் தயார் நிலையில் நெற்பயிர்கள்: அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு.. வேதனைத் தெரிவிக்கும் விவசாயிகள்... எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு வேளாண்துறை அலுவலர்கள் தமிழ்நாடு அரசிடமிருந்து, கூடுதலாக நெல் அறுவடை இயந்திரங்களை அறுவடைப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே பலன் பெற முடியும்.
இல்லையென்றால் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொடுத்தால் விவசாயிகளுக்குப்போதுமானதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது ? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் ..