திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் மழை வெள்ள சேதங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வளவனாறு அரிச்சந்திரனாறு, வெள்ளையாறு உள்ளிட்ட கடலில் கலக்கக்கூடிய வளவனாறு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.950 கோடி மதிப்பீட்டில், 2016இல் முதல் கடல் முகத்துவாரம் நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் தொடங்கின.
எனினும் தற்போதுவரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. மீதம் 40 சதவீத பணிகளை ஒப்பந்த நிறுவனம் முழுமையாக முடிக்க மறுத்து, ஊழல் முறைகேடு செய்ய முயற்சித்து வருகிறது. மேலும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழை வெள்ள நீர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளிலும் ஓடக்கூடிய ஆறுகள் வழியாக வளவனாற்றில கலந்து கடலில் சென்று வடிகிறது. முனாங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் ஏழு கிலோ மீட்டர் தூரம் வளவனாறு மணல் மேடிட்டு வெள்ள நீர் வடிவது தடைப்பட்டுள்ளது.