திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே அரிச்சபுரம் ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயபால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அலுவலர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், ஆன்லைனிலும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, திமுக வார்டு உறுப்பினர் ஜெயபால் தோல்வி அடைந்து விட்டதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வை சேர்ந்த குமார் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்பு பதிவேட்டில் குமாரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் பதவியேற்பு விழாவில் குளறுபடி இதையறிந்த ஜெயபால் தனது கட்சியினருடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்ததால், வெற்றிப் பெற்றதாக அளிக்கப்பட்ட சான்றிதழை திரும்ப தரும்படி அலுவலர்கள், ஜெயபாலிடம் வலியுறுத்தினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், திமுக கட்சியினருக்கும் அரசு அலுவலர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் வெற்றிச் சான்றிதழை திரும்ப அளிக்காமல் ஜெயபால், பதவியேற்பு விழாவில் இருந்து வெளியேறினார். அதிமுக வார்டு உறுப்பினர் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
இது குறித்து ஜெயபால் கூறுகையில், "தேர்தலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் கொடுத்து விட்டு, தற்போது தோல்வியடைந்து விட்டதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆளுங்கட்சியினருடன் சேர்ந்துக் கொண்டு அரசு அலுவலர்களும் முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடுக்க உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: மிளகாய்ப்பொடி தூவி 20 சவரன் நகை திருட்டு