திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 144 தடை உத்தரவை மீறி மருத்துவக் குழுவினரின் அறிவுரையைத் தவிர்த்து வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 16 பேர் வெளியில் நடமாடுவதாக வந்த புகாரையடுத்து 16 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அறிவுரையைக் கேட்காமல் வெளியில் சுற்றி வரும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் இது விரைவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.