திருவாரூர்:பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் இவர் பேரளம் பகுதியில் தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவருக்கு அருண், ராஜேஷ், ஹரிஷ் என்கிற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மற்றும் இளைய மகன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது இரண்டாவது மகன் ராஜேஷ் வயது 23. இவர் திருச்சி தென்கை ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் பேரளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளி பருவம் முதல் தடகள போட்டியில் ஆர்வம் கொண்டு பல்வேறு பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளார்.கடந்த 2006ம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பாவின் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஷ், கேரளாவைச் சேர்ந்த முகமது ஆனாஸ், முகமது அஜ்மல் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஹமூர் ஜாகப் ஆகிய நான்கு பேரும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.