திருவாரூர்: அன்னதானபுரம் கிராமத்திலுள்ள சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள அன்னதானபுரம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் பிரதானமாக பயன்படுத்திவரும் அன்னதானம்புரம் சாலையானது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாததால் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்தநிலை நீடித்து வருவதால், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அன்னதானபுரம் சாலையானது மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல், பெரம்பலூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்லக்கூடிய வழியாக உள்ளதால், வெளியூர் மக்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையை சீரமைக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், சட்டப்பேரவை உறுப்பினரிடத்திலும் மனு கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
15 ஆண்டுகளாக முடிவுக்கு வராத சாலை சீரமைப்பு - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை பதினைந்து ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் நிலையை கவனத்தில் கொண்டு, சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.