மன்னார்குடி : மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பேரிடர் காலத்தில் அவசர அவசரமாக ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்த பாராளுமன்ற கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்படாமல் விவசாயிகளுக்கு எதிரான பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
தமிழ்நாட்டில் அப்போது பதவியில் இருந்த அதிமுக ஆட்சி தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தை ஆதரித்ததால் ஒட்டுமொத்த விவசாயிகளும் உலக அரங்கில் தலை குனிய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிந்து அந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இதனை அதிமுக எதிர்த்து வெளிநடப்பு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் விவசாயிகளை மீண்டும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
வழக்குகள் தள்ளுபடி
முதலமைச்சர் உறுதியோடு சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல்,அதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. அவருக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கையை ஒன்றிய ஜல்சக்தித்துறையிடம் அளித்து அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா அனுப்பி வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் தெரிவித்ததாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது மிகுந்த உள்நோக்கம் கொண்டது.