தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர். பாண்டியன் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு மன்னார்குடி திரும்பியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் இரண்டு மாத காலத்தைக் கடந்து போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. குடியரசு தின விழா டிராக்டர் பேரணி டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் எங்கள் வேண்டுகோளை ஏற்று விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவாரூர் உள்ளிட்ட சில இடங்களில் டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கோடு காவல் துறையைத் தூண்டிவிட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் இடமளிக்கக் கூடாது.
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் நல்ல நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அகிம்சை வழிப் போராட்டங்களுக்கு காவல் துறையும் உரிய அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்கிவருகிற நிலையில், வேளாண் விரோத சட்டங்களைத் தமிழ்நாடு அரசு ஆதரித்த ஒரே காரணத்தால், அதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டமே நடத்தக் கூடாது என்ற ஜனநாயக விரோத நடவடிக்கையில் முதலமைச்சர் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.
அப்படி நடைபெறும் போராட்டங்களில் காவல் துறையைத் தூண்டிவிட்டு விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது மனிதநேயமற்றச் செயல். விவசாயிகளுக்கும் காவல் துறைக்குமான நல் உறவுகளை முதலமைச்சரே சீர்குலைக்க முயற்சிப்பது வெட்கக்கேடானது. எனவே டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். கைப்பற்றப்பட்ட டிராக்டர்கள் உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். டெல்டாவில் அறுவடைப்பணி தொடங்கியிருக்கிற நேரத்தில் நீதிமன்ற வாயிலில் டிராக்டர்களைக் கொண்டுசென்று அடைத்திருப்பது விவசாயிகளைப் பழிவாங்கும் செயலாகும்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் பி.ஆர். பாண்டியன் டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் வீடுகளில் நள்ளிரவு நேரங்களில் காவல் துறையினர் கல்லெறிந்து அச்சுறுத்துகிற நடவடிக்கை நடப்பதாக வந்திருக்கிற செய்தியும் கேலிக்கூத்தாக உள்ளது.
உண்மைநிலையைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து காவல் துறையின் நன்மதிப்பைப் போற்றி பாதுகாப்பதோடு, விவசாயிகளுக்கும் காவல் துறைக்குமான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:'வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது வரவேற்கத்தக்கது' - பி.ஆர். பாண்டியன்