திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற புகழ் பெற்ற காவிரி டெல்டாவில் சுமார் 18 லட்சம் ஏக்கரில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சுமார் 2 கோடி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. சென்னை உள்பட 25 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாகவும், கீழ் பாசன விவசாயிகளின் கருத்தையறியாமலும், அவரது விருப்பத்திற்கு சொந்த தொகுதியான எடப்பாடி பகுதிக்கு மட்டும் குடிநீர் என்ற பெயரில் மேட்டூர் அணை - சரபங்கா நீர் பாசனத் திட்டத்தை கடந்த மாதம் முதலமைச்சர் தொடங்கி உள்ளார். இதன்படி, மேட்டூர் அணையின் இடது கரையை சக்தி வாய்ந்த வெடிப்பொருள்கள் மூலம் வெடிக்க செய்து, 80 அடி ஆழம் 100 அடி அகலத்தில் திப்பம்பட்டி கிராமத்தில் மிகப் பெரும் கால்வாய் அமைக்கப்படவிருக்கிறது.
மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் நிரம்பும் நிலையில் கால்வாயின் வழியே 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் ஏரியில் தண்ணீர் தானே சென்று நிரம்பும், அதன் பின்பு தான் மேட்டூர் அணை 120 அடி நிரப்பப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து இரண்டு ராட்சத குழாய்கள் மூலம் மேச்சேரி ஏரிக்கு நீர் கொண்டு சென்று நிரப்பப்படும். பின்பு கால்வாய்கள் மூலம் 100 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி பாசனம் பெறும் வகையில் பாசன இணைப்பு கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன.