திருவாரூர்: பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி காந்தி சிலை அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி விவசாயிகளோடு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக பின்பற்றினார். குறிப்பாக வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதனை தனியார் மயமாக்கி 12 பெருநிறுவன முதலாளிகள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய காலத்தில் இழப்பீடு பெற முடியாத நிலையை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்ட நரேந்திர பிரதமர் மோடி 2020இல் கரோனாவால் உலகமே முடங்கி இருந்த நிலையில் ஒரு சில மணி நேரங்கள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களை நிறைவேற்றினார்.
விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை, மாறாக பெருநிறுவனங்கள் தயாரித்துக் கொடுத்த சட்டத்தை அவர்கள் விருப்பத்தின் பேரில் சட்டமாக்கினார்.