திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
காவிரி டெல்டாவில் அரசு அறிவித்ததையடுத்து தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு குளம், குட்டைகளிலிருந்த தண்ணீரைக் கொண்டு சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் நடவுப்பணி செய்ய நாற்று விடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூரிலிருந்து உரிய அளவில் தண்ணீர் விடுவிக்கப்படாததால் சாகுபடி பணியை தொடர முடியாமல் விவசாயிகள் பரிதவித்துவருகிறார்கள்.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விடுகிறோம் என விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றலாமா? காலம் கடந்து சாகுபடி செய்தால் அக்டோபர் மாத பருவமழையில் அறுவடைப் பயிர்கள் அழிந்துபோகும் என எச்சரிக்கிறேன்.
மேட்டூர் அணை நிர்வாக அதிகாரங்கள், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் தஞ்சாவூர் வசம் இருந்ததை மாற்றி முதலமைச்சர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றார். இதனால் டெல்டா விவசாயிகள் நலன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். விவசாயிகள் நலன்கருதி உடனடியாக 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து மக்கள் வருவாயின்றி அவதிப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் கந்து வட்டிக் கொடுமை அரங்கேறிவருவதைத் தடுத்த நிறுத்த மாவட்ட அளவில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்திட முதலமைச்சர் முன்வர வேண்டும்.
சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை குறித்து நீதிமன்றம் தானே முன்வந்து காவல் துறை மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் தமிழ்நாடு மக்கள் பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது உலக சிறப்புப் பெற்ற தமிழ்நாடு காவல் துறைக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு. இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை வேளாண் ஒழுங்கு முறை விற்பனை நிலையங்களில் மாதக்கணக்கில் குவித்துவைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.