திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார்.
விடுமுறை இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் - நெல் கொள்முதல் நிலையம் ஆய்வு
திருவாரூர்: விடுமுறை இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், குறுவை சாகுபடி வெகு சிறப்பாக நடைபெற்று விளைச்சல் கூடுதலாக இருக்கிறது. 500 முதல் 600 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கொள்முதல் நிலையத்தில் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
24 மணி நேரத்தில் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் வரை 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் என்கின்ற அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
இதனால் 6 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த காரிப் சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியுள்ளது. மத்திய அரசு கூடுதலாக குவிண்டாலுக்கு ரூபாய் 53 கூடுதலாக விலை நிர்ணயம் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையிலும் விடுமுறை இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். எந்தெந்த இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையோ அந்த இடங்களில் ஒரு ஊரில் இரண்டு கொள்முதல் நிலையங்கள் தேவை என்றாலும் திறக்க அரசு தயாராக உள்ளது.
திடீர் மழையினால் ஒரு சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லாமலும் அரசிற்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்து கொடுக்கப்படும் என கூறினார்.