கார்ப்பரேட்டுகளைக் களமிறக்குவதற்கு கரோனாவை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்தியாவைக் கூறு போட்டு, விற்பனை செய்யும் மோசடியில், மோடி அரசு ஈடுபடுவது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்புப் பொருளாதார அறிவிப்பில் இருந்ததாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதள ஊடகத்திடம் பேசுகையில், "கரோனா தாக்குதலால் இந்தியா முடங்கி உள்ள நிலையில், காய்கனி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் 80 விழுக்காடு முற்றிலும் உற்பத்தி செய்த நிலத்திலேயே அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் கண்ணெதிரிலேயே அழிந்துள்ளது. இதனைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது விவசாயிகள் முடங்கி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இழப்பிற்கு நிவாரணம் வழங்கி, நிலுவைக் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்வார்கள் என எதிர் பார்த்தோம். ஆனால் மறுத்து விட்டனர்.