திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியில் வசித்து வருபவர், எம்.பி செல்வராஜ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும், நாகப்பட்டிணம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார்.
செல்வராஜ் 6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர். தற்போது மூன்றாவது முறையாக நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜை மீட்ட அவரது குடும்பத்தினர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து எம்.பி செல்வராஜ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கும்போது உடல்நிலை மோசமாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் தனியார் காலணி தொழிற்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த உள்ளிருப்பு போராட்டம்!