திருவாரூர்:முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனித்துரை மனைவி ஜெயம். 65 வயது மூதாட்டியான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், இவர் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு வீட்டுடன் உள்ள கோயில் சொத்தும், வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாரிசுகள் யாரும் இல்லாததால், அவரின் உறவினர்கள் சிலரே அவரை பராமரித்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் ஜெயத்தின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு, அவரை பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் 6 வருடங்களுக்கு முன்பு, மூதாட்டி ஜெயத்தை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர், மூதாட்டி எங்கும் செல்லாத வகையில், அவரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சிறை வைத்து, ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
இப்படியாக பூட்டிய வீட்டில் அடைக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஏதுமின்றி, சரியான உணவும் வழங்கப்படாமல் பெரும் துயரத்தை அனுபவித்து வந்துள்ளார், மூதாட்டி. அதோடு உடல்நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, அங்கேயே இயற்கை உபாதைகள் கழித்தும், அதே இடத்தில் உறங்கியும், போதிய பராமரிப்பு இல்லாமல் ஜெயம் உடல் மெலிந்து தற்போது பரிதாபமான நிலையில் உள்ளார்.