திருவாரூர்கீழ வீதியைச்சேர்ந்தவர், முருகன் அவருடைய மகள் அட்சயரத்னா. முருகன் கடந்த 2019ஆம் ஆண்டு, வீட்டு வேலை செய்துகொண்டு இருக்கும்போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அட்சயரத்னா பூப்படைந்தார். மரித்த முருகனின் ஆசைப்படி, அவரது உடன்பிறந்த சகோதரிகள் ஆறு பேர் சேர்ந்து, அட்சயரத்னாவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதற்காக, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முருகனின் எண்ணப்படி, 2 ஆயிரம் பேருக்கு உணவளித்து, 600 சீர்வரிசை தட்டுகளுடன் அலங்கரிக்கப்பட்ட லாரியில், மேளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, தங்களது சகோதரரின் மகள் செல்வி.அட்சயரத்னாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவினை கோலாகலமாக நடத்தி மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆறு பாசக்கார அத்தைகள்.