திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது. இந்நிலையில் காவிரி டெல்டா விவசாயத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வசதியின்றி எட்டு ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த குறுவை சாகுபடி இந்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவு குறுவை சாகுபடியை முழுமையாக செய்யத் தடையாக இருக்கிறது.
இது குறித்து விவசாயி மாசிலாமணி கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளில் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வந்தது. இதிலும் வறட்சி, மழை, வெள்ளம், நோய் தாக்குதல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் விவசாயிகள் தவித்துவருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை தீர்ப்பதில் விவசாயிகள் சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர்.
இதனால் பல விவசாயிகள் தொடர்ந்து கடன் பெற தகுதி இல்லாதவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே குறுவை சாகுபடி விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிர் கடன்களை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
குறுவை சாகுபடி: பயிர்க் கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை! விவசாயிகள் கடன்சுமையைச் சமாளித்து சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக பயிர் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் இது போன்ற பிரச்னைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர் அனைத்து ஆறுகளிலும் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குறுவை சாகுபடி தீவிரம்: 4% வட்டி நகைக்கடனை வழங்க வலியுறுத்தல்!