ஒவ்வொருவரும் தான் எழுதிய முதல் கடிதம் எதுவென்றால் அது பள்ளி நாட்களில் எழுதிய விடுமுறை கடிதமாகவே இருக்கும். அந்த கடிதமும் எவ்வாறு இருக்கும் என்றால் காய்ச்சல், வயிறுவலி, உறவினர் இறந்து விட்டார் இதில் எந்த அளவிற்க்கு உண்மை இருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் நேர்மையான முறையில் விடுமுறை கடிதம் எழுதியுள்ளார் தீபக் என்னும் மாணவர். திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக். கடந்த 18ஆம் தேதி வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து மாணவன் தீபக் கூறுகையில், தனக்கு கபடி விளையாட்டு பிடிக்கும் என்றும் அதனால் தங்கள் ஊரில் நடைபெற்ற கபடி விளையாட்டை தூங்காமல் பார்த்ததால் உடல் சோர்வு ஏற்பட்டது. விடுமுறை கேட்பதற்காக பொய் கூற மனம் வரவில்லை என்றும், அது நேர்மையாக இருக்காது எனவே நேர்மையான விடுமுறை கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.